ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். இவர், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராகவும் இருந்தார். நவாஸ் ஷெரீப் மீது கடந்த 2018-ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கில் நவாஸுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவர் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதித்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப் லாகூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற அனுமதியுடன் மேல் சிகிச்சைக்காக லண்டனுக்குச் சென்றார். இதன் பிறகு, பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஆட்சி நடந்தது.
இதனால், நவாஸ் ஷெரீப் நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கி விட்டார். இதன் பிறகு, இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்து நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சி வந்தது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப் கடந்த அக்டோபர் மாதம் நாடு திரும்பினார்.
இதற்கிடையே, ஊழல் வழக்குகளில் இருந்து நவாஸ் ஷெரீப் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, 2024 பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட நவாஸ் ஷெரீப் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த வேட்பு மனுவை அந்நாட்டு தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இது குறித்து நவாஸ் ஷெரீப்பின் வழக்கறிஞர் அம்ஜத் பர்வேஷ் கூறுகையில், “ஊழல் வழக்குகளில் இருந்து நவாஸ் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட தகுதி நீக்கம் முடிவுக்கு வந்து விட்டது. ஆகவே, அவர் லாகூர் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். ஆட்சேபனையுமின்றி மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன” என்றார்.