கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கன்னட மொழி இல்லாமல் வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளை கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள், கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் கடைகளின் பெயர்ப் பலகைகளில் ஆங்கிலம் மற்றும் தாங்கள் சார்ந்த தாய் மொழிகளை எழுதி வைத்திருந்தனர். இதற்கு, கன்னட மொழி இல்லை எனக் கூறி கர்நாடக ரக்ஷன வேதிக் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட மொழியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக கர்நாடக ரக்ஷன வேதிக் எனப்படும் கர்நாடக பாதுகாப்பு மன்றம் மல்லேஸ்வரத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட குடிமை அமைப்பின் தலைமை ஆணையர் துஷார் கிரிநாத், “கிரேட்டர் பெங்களூரு பெருநகர மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் கடைகள், உணவகங்கள், பிற வணிக நிறுவனங்கள் கன்னட பெயர்ப் பலகை விதியை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும். இதற்கான காலக்கெடுவாக 2024 பிப்ரவரி 28-ம் தேதி நிர்ணயிக்கப்படும். மால்களில் உள்ள கடைகளிலும் பெயர்ப் பலைகளை கன்னடத்தில் மாற்ற வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை சட்ட எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். ஆணையரின் இந்த உத்தரவு கர்நாடகாவில் மொழி பிரச்சனையை கிளப்பியது.
இதனால் கன்னட மொழி பேசுபவர்களுக்கும், ஹிந்தி மொழி பேசுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மேலும், இது தொடர்பாக கர்நாடக ரக்ஷன வேதிக் அமைப்பினர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பிரச்சார வாகனத்தில் வந்த பெண் பேசுகையில், “இது கர்நாடக மாநிலம். கன்னடர்கள் மாநிலத்திற்கான பெருமை.
உங்கள் மாநிலத்திற்கு நீங்கள் சென்று உங்கள் பெருமைகளைக் காட்டுங்கள். மார்வாடிகளே, அடுத்த முறை நீங்கள் கன்னடம் தெரியாது என்று சொன்னால் நீங்கள்தான் இலக்காவீர்கள்” என்று ஆவேசமாகக் கூறினார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று பெங்களூருவில் ஆங்கிலத்தில் இருந்த கடைகளின் பெயர் பலகைகளை கர்நாடக ரக்ஷன வேதிக் அமைப்பினர் அடித்து சேதப்படுத்தினர். பெங்களூரு நகரம் முழுவதும் உள்ள கடைகள், ஹோட்டல்கள், தனியார் அலுவலகங்களில் வேறு மொழியில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளை அப்புறப்படுத்தியும், கடைகள், ஷாப்பிங் மால்கள் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக பெங்களூரு நகரம் முழுவதும் பெரும் பரபரப்பாகக் காணப்படுகிறது. போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.