தேமுதிக தலைவரான விஜயகாந்த், கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்த விஜயகாந்த்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார்.
தமிழகத்தில் சிகிச்சை பெற்று வந்த அவரை, அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால், அவரது உடல் நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், அவர் தொடர் சிகிச்சைக்கு தள்ளப்பட்டார். ஆனாலும், அவ்வப்போது, முக்கிய நாட்களில் தொண்டர்கள் முன்பு விஜயகாந்த்தை நிறுத்தி வருகிறார் பிரேமலதா.
இதனிடையே, வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால், அவர் சென்னை கிண்டியை அடுத்துள்ள மணப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், சில நேரங்களில் சுவாசிப்பதில் சிரமப்பட்டார். இதனால், அத்தகைய தருணங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. மேலும், நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
ஏற்கெனவே, மருத்துவமனையில் 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில், கடந்த 12-ம் தேதி வீடு திரும்பினார். பின்னர், தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிலையில், அவர் மீண்டும் தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால், தொண்டர்களுக்கு உண்மை நிலையை விளக்கும் வகையில் தேமுதிக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் , வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில், பூரண நலத்துடன் இருக்கிறார். 28-ம் தேதி வீடு திரும்புவார் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் பதட்டத்தில் இருந்து மீண்டு வந்தனர்.
ஆனால் இன்று அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
முன்னதாக இன்று காலையில் இருந்தே மியாட் மருத்துவமனையில் தேமுதிக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதேபோல் சென்னை வளசரவாக்கத்தில் அவரது வீடு அமைந்திருக்கும் பகுதியிலும் தேமுதிக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். அவரது மறைவுச் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமானோர் குவிந்துவிட்டனர்.