நடிகர் விஜயகாந்த் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்து, ஒரே ஒரு இயக்குநர் இயக்கத்தில் மட்டும் 17 படங்கள் நடித்துள்ளார். அந்த இயக்குனர் மற்றும் படங்கள் குறித்த விவரங்களை பார்ப்போம்.
ஒரே ஒரு இயக்குனர் இயக்கத்தில் தொடர்ந்து, 3 அல்லது 4 படங்கள் நடித்தாலே தற்போது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் நடிகர் விஜயகாந்த் நடிக்க துவங்கிய காலத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து, முன்னணி நடிகராக மாற்றிய இயக்குநர் இயக்கத்தில் மட்டுமே சுமார் 17 படங்களில் நடித்துள்ளார்.
இப்படி இவர் நடித்த படங்கள் சில வெற்றி பெறாமல் போனாலும், 70 சதவீத படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களாகவே உள்ளது. விஜயகாந்தின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த அந்த ஆஸ்தான இயக்குனர் வேறு யாரும் இல்லை, தளபதி விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திர சேகர் தான்.
எஸ்.ஏ.சந்திர சேகர் படங்களில் நடித்து விஜயகாந்த் பெரிய நடிகராக மாறினார், அதேபோல் விஜயகாந்தை வைத்து படம் எடுத்து எஸ்.ஏ.சந்திர சேகர் பெரிய இயக்குனராக மாறினார். இப்படி இருவரும் தங்களை சேர்ந்தே உயர்திக்கொண்டனர்.
இவர்களின் கூட்டணியில் 1981 ஆம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை படம் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து நெஞ்சில் துணிவிருந்தால் (1981) , நீதி பிழைத்தது (1981), என இரண்டு படங்களை இயக்கினார்.
பின்னர் பட்டணத்து ராஜாக்கள் (1982) , ஓம் சக்தி (1982) , சாட்சி (1983), வெற்றி 1984), வீட்டுக்கு ஒரு கண்ணகி (1984), குடும்பம் (1984), புது யுகம் (1895), நீதியின் மறுபக்கம் (1985), என அடுத்தடுத்து 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் எஸ்.ஏ.சியுடன் பணியாற்றினார் விஜயகாந்த்.
பின்னர் எனக்கு நான் நீதிபதி (1986), வசந்த ராகம் (1986), சட்டம் ஒரு விளையாட்டு (1987), ராஜநடை (1989) , ராஜதுரை (1993), பெரியண்ணா (1999), என மொத்தம் 17 படங்களை அவர் இயக்கத்தில் நடித்தார். இதை தொடர்ந்து சில வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தார்.
எஸ்.ஏ.சி விஜயகாந்தை ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே நடிக்க வைக்காமல், மாறுபட்ட கதாபாத்திரத்திலும் நடிக்க வைத்து, அவருக்குள் இருந்த திறமையை வெளிக்கொண்டு வந்தவர். எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இயக்குனர் பாலச்சந்தர் உறுதுணையாக இருந்தாரோ அதே போல், விஜயகாந்த் திரையுலக பயணத்தில் எஸ்.ஏ.சிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.