மோசடி கடன் செயலிகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இந்தியாவில் தற்போது ஏராளமான கடன் செயலிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகிறது. இதுபோன்ற கடன் செயலிகள் அதிக அளவில் வட்டி வசூலிப்பது, கடன் பெறுபவர்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களைத் திருடி அவற்றை ஆபாசமாக சித்தரிப்பது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன.
மேலும், செல்போனில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் எண்களை திருடி, கடன் வாங்கியவர்களைப் பற்றி தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் பேசுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றன. இதனால், இவ்வகை செயலிகளில் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன.
தவிர, கடன் செயலிகள் என்ற பெயரில் தகவல் திருட்டு, வங்கி விவரங்கள் திருட்டு போன்ற சம்பவங்களும் நிகழ்கின்றன. எனவே, இதுபோன்ற மோசடி செயலிகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு சமீபத்தில் சமூக வலைத்தள நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி விவாதித்தது. அப்போது, சமூக வலைத்தளங்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில்தான், மோசடி கடன் செயலிகள் குறித்த விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய வழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சந்திரசேகர் கூறுகையில், “மோசடி கடன் செயலிகள் தொடா்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
ஏனெனில், அவை இணையத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது, மோசடி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இணையம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்த சேவைகள் மட்டும் கிடைக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் விதிகளில் இணையத்தில் வெளியிட தடை செய்யப்பட்ட 11 விஷயங்கள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளது” என்று கூறினார்.