இந்தியாவில் ஒரே நாளில் 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,097 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் இருவரும், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் டெல்லியில் தலா ஒரு நபரும் என 6 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கின்றனர்.
புதிதாக பரவி வரும் கொரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸ் குளிர் காலத்துக்கு பிறகு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், டிசம்பர் 26 ஆம் தேதி வெளியான தகவல்படி, கொரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 யை எட்டியுள்ளது.
இந்த பாதிப்பால் கர்நாடகா, கேரளா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் மாவட்டத்தில் தலா ஒருவருக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.