விமானத்தில் 300 பேரை நிகராகுவாவுக்கு கடத்திச் சென்ற விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மற்றும் குஜராத் போலீஸார் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
லெஜெண்ட் ஏர்லைன்ஸ் விமானம் துபாயிலிருந்து 11 சிறுவர்கள் உட்பட 303 பேருடன் கடந்த வாரம் நிகராகுவாவுக்குச் சென்று கொண்டிருந்தது. வழியில், இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸின் வாட்ரி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அப்போது, அந்த விமானத்தில் ஆள் கடத்தல் நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிரான்ஸ் அதிகாரிகள் அந்த விமானத்தை சுற்றி வளைத்தனர். பின்னர், விமானத்தில் இருந்தவர்களை விமான நிலையத்தில் தங்க வைத்தனர்.
பின்னர், இது தொடர்பாக பயணிகளில் இருவரிடம் பிரான்ஸ் போலீஸ் அதிகாரிகள் 4 நாட்களாக விசாரணை நடத்தினர். மேலும், பயணிகளிடம் நீதித்துறை விசாரணையும் நடைபெற்றது. அப்போது, பயணிகள் அனைவரும் தங்கள் விருப்பத்தின் பேரில் பயணித்தது தெரியவந்தது.
எனவே, அந்த விமானம் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, வாட்ரி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், கடந்த 26-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மும்பை வந்தடைந்தது. ஆனால், 303 பயணிகளில் 276 பேர் மட்டுமே வந்தனர்.
5 சிறுவர்கள் உட்பட 25 பேர் பிரான்ஸிலேயே தங்க அனுமதி கோரியதால், அங்கேயே தங்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல, ஆட்களை கடத்தியிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை நடத்திய 2 பேரும் பிரான்ஸிலேயே இருக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, மேற்கண்ட விமானத்தில் இருந்த பயணிகளில் 3-ல் 2 பங்கு பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மீதி 25% பேர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே, முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சியின் பின்னணியில் செயல்பட்ட நெட்வொர்க்கைக் கண்டறிய குஜராத் காவல்துறை குழுக்களை அமைத்தது.
குஜராத்தில் இருந்து வந்த பயணிகள் பனஸ்கந்தா, படான், மெஹ்சானா மற்றும் ஆனந்த் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மும்பையில் இருந்து பயணிகள் குஜராத்தைச் சென்றடைந்தவுடன், இதில் தொடர்புடைய முகவர்கள் குறித்து விசாரிக்க, அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று சி.ஐ.டி. (குற்றம்) காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் காரத் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, பயணிகளின் விவரங்களை அறிந்த பஞ்சாப் காவல்துறை அதிகாரி ஒருவர், “மீண்டும் நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் 20-களின் நடுப்பகுதி அல்லது 30-களின் முற்பகுதியில் உள்ளவர்கள் . இவர்கள் செல்லுபடியாகும் நிகராகுவா விசாவைப் பெற்றவர்கள்” என்றார்.