டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.
உத்தரப்பிரதேசம், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லியில் (காலை) குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 2 டிகிரி உயா்ந்து 8.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 1 டிகிரி உயா்ந்து 21.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 95 சதவீதமாகவும், மாலை 82 சதவீதமாகவும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவுவதால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.
வாட்டி வதைக்கும் குளிர் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். கடும் பனிமூட்டம் காரணமாக 22க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக செல்கின்றன.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 29) மிகவும் அடா்த்தியான மூடுபனி நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஓட்டுநர்கள் எச்சரிக்கையுடன் வாகனத்தை இயக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளளது.