அயோத்தியை வந்தடைந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் இருந்து இரயில் நிலையம் வரை 15 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அப்போது, சாலையின் இருபுறமும் குவிந்திருந்த மக்கள் மலர்தூவி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்கு இன்று சென்றார். அயோத்தி விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமருக்கு, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல், இரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் உள்ளூா் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.
பின்னர், பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து அயோத்தி தாம் இரயில் நிலையம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகப்பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தினர். அப்போது, சாலையின் இரு புறமும் கண்கவர் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு பல்வேறு வடிவங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன.
‘புண்ணிய நகரான அயோத்திக்கு வரவேற்கிறோம்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. மேலும், பிரதமர் மோடி படம் பொறித்த பிரம்மாண்டமான பேனர்களும், கட் அவுட்களும் 15 கி.மீ. தொலைவுக்கும் நிறைந்திருந்தன. பிரதமர் மோடி நடத்திய ரோடு ஷோவில் சுமார் 1.5 லட்சம் பேர் திரண்டிருந்தனர்.
சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்கள், மலர்தூவி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதோடு, மோடியை உற்சாகப்படுத்தும் வகையில் 40 இடங்களில் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 2,000 நடனக் கலைஞர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆங்காங்கே நடனமாடி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
இதைக் கண்ட பிரதமர் மோடி, தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் கையசைத்து நன்றி தெரிவித்தார். பின்னர், மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி பிரதமர் மோடி வாகனம் புதிய இரயில் நிலையத்துக்கு சென்றடைந்தது. தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரமதர் மோடி கலந்துகொண்டார். பிரதமரின் வருகையை முன்னிட்டு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.