அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் இரயில் நிலையத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இக்கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.
மேலும், எதிர்காலத்தில் அயோத்தி இராமர் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு அயோத்தி நகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், முதல்கட்டமாக அயோத்தியில் அதி நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாணட் விமான நிலையம் கட்டப்பட்டிருக்கிறது.
அதேபோல, அயோத்தி இரயில் நிலையம் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் சர்வதேசத் தரத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரயில் நிலையத்துக்கு அயோத்தி தாம் இரயில் நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த இரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றை திறந்து வைப்பதற்காகவும், புதிதாக பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டு அயோத்திக்குச் சென்றார்.
அயோத்தி விமான நிலையத்துக்குச் சென்றடைந்த பிரதமர் மோடியை, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல், இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.
பின்னர், பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து அயோத்தி தாம் இரயில் நிலையத்துக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். வழியில் சுமார் 15 கி.மீ. தூரத்துக்கும் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அப்போது, சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்கள் பிரதமருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் பிறகு, அயோத்தி தாம் இரயில் நிலையத்தைச் சென்றடைந்த பிரதமர் மோடி, புதிய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். மேலும், இரயில் நிலையத்தில் செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, அயோத்தி தாம் இரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், அம்ரித் பாரத் இரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.