ராஜஸ்தான் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் உட்பட 22 பேர் ராஜஸ்தான் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நிறைவடைந்து, கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்ததில், பா.ஜ.க. 115 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
பின்னர், முதல்வரை தேர்ந்தெடுக்க மத்தியப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி விவாதித்தனர். அப்போது, பஜன்லால் ஷர்மா ஏகமனதாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 15-ம் தேதி பஜன்லால் ஷர்மா முதல்வராக பதவியேற்றார். அவருடன் தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
இந்த நிலையில், முதல்வர் பஜன்லால் ஷர்மா தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, 22 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஜெய்ப்பூரில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவர்களில், கிரோடி லால் மீனா, மதன் திலாவர், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கஜேந்திர சிங் கின்ஸ்சார், பாபுலால் கராடி, ஜோகாராம் பாடேல், சுரேஷ் சிங் ராவத், அவினாஷ் கெலோட், ஜொராராம் குமாவத், ஹேமந்த் மீனா, கன்ஹையா லால் சவுத்ரி, சுமித் கோதரா ஆகிய 12 பேர் கேபினெட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சஞ்சய் ஷர்மா, கவுதம் குமார், ஜாபர் சிங் கர்ரா, சுரேந்திர பால் சிங், ஹீராலால் நாகர் ஆகிய 5 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும் 5 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
















