இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 258 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
அதன் இரண்டாவது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனையாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் அலிசா ஹீலி ஆகியோர் களமிறங்கினர். இதில் அலிசா ஹீலி 13 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி மற்றும் லிட்ச்ஃபீல்ட் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.
லிட்ச்ஃபீல்ட் 63 ரன்களும், அலிசா ஹீலி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தஹ்லியா மெக்ராத் 24 ரன்களிலும், அன்னாபெல் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க அலனா கிங் 28 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 258 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி ஷர்மா 5 விக்கெட்களை எடுத்து அசத்தினார்.
பூஜா, சினே ரானா, ஸ்ரேயங்கா பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் இந்திய அணி வெற்றி பெற 259 ரன்கள் இலக்காக உள்ளது.