சம்பளம் தரவில்லை என்று ஆசிரியர்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதிரடி நடவடிக்கை எடுத்து, சம்பவளத்தை வழங்கச் செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. இவர், 3 நாள் பயணமாக தனது சொந்தத் தொகுதிக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அத்தொகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்மிருதி இரானியிடம் புகார் மனு அளித்தனர்.
இவர்களில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள் பலரும் அடக்கம். இவர்கள் கொடுத்த புகார் மனுவில், நாங்கள் ஓய்வுபெற்ற போதிலும், வேலை பார்த்தபோது எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. அதைப் பெற்றுத்தர உதவ வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்ட ஸ்மிருதி இரானி, உங்கள் முன் நிலுவையில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் உடனடியாக சரிபார்த்து அனுப்புங்கள் என்று உத்தரவிட்டார்.
மேலும், “கொஞ்சம் மனிதாபிமானத்தை காட்டுங்கள். இது அமேதி. இங்குள்ள ஒவ்வொருவரும் என்னை அணுகலாம். யோகி ஆதித்யநாத் அரசு, சம்பளம் நிலுவையில் உள்ள ஆசிரியர்களுக்கு உடனடியாக சம்பளம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஆகவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.