அயோத்தியில் கட்டப்படும் இராமர் கோவிலால் நாடு முழுவதும் உற்சாகம் நிலவுகிறது. மக்கள் தங்களது உணர்வுகளை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். இராமர் பற்றி புதிய பாடல்கள் மற்றும் பஜனைகள் பாடப்படுகின்றன என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
2014-ம் ஆண்டு பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, அக்டோபர் மாதம் முதல் “மன் கி பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம், அகில இந்திய வானொலி வாயிலாக, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில், இம்மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடியின் 108-வது மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் கஹி வந்திந்தார்கள்.
அவர்களுடன் தொடர்பு கொள்ள முதல்முறையாக ‘பாஷினி’ என்ற AI கருவியைப் பயன்படுத்தினேன். நான் இந்தியில் உரையாற்றியதை, அவர்கள் தமிழ் மொழியில் கேட்டார்கள். ஆகவே, நிகழ்நேர மொழிபெயர்ப்பு தொடர்பான AI கருவிகளை ஆராய இன்றைய இளம் தலைமுறையினரை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், உடல் ஆரோக்கியத்தில் ஆர்வம் அதிகரிப்பதால், பயிற்சியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ‘ஜோகோ டெக்னாலஜிஸ்’ போன்ற ஸ்டார்ட் அப்கள் இந்த தேவையை பூர்த்தி செய்ய உதவுகின்றன. புதுமையான ஹெல்த்கேர் ஸ்டார்ட் அப்கள், ஃபிட் இந்தியா கனவை நனவாக்க பங்களிக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் மனதின் குரல் நிகழ்ச்சிக்காக, நீங்கள் எழுதும் கடிதத்தின் மூலமே இதுபோன்ற தகவல்கள் எனக்குக் கிடைக்கின்றன. ஆகவே, எனக்கு தொடர்ந்து எழுதுமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
அயோத்தியில் கட்டப்படும் இராமர் கோவிலால் நாடு முழுவதும் உற்சாகம் நிலவுகிறது. மக்கள் தங்களது உணர்வுகளை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். இராமர் பற்றி புதிய பாடல்கள் மற்றும் பஜனைகள் பாடப்படுகின்றன.
சில பாடல்கள் மற்றும் பஜனைகளை சமூக வலைதளத்தில் நானும் பகிர்ந்திருக்கிறேன். இதன் மூலம் கலை உலகமும், தனது தனித்துவமான ஸ்டைலில், வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது.
இதுபோன்ற படைப்புகளை அனைவரும் சமூக வலைதளத்தில் ‛ஸ்ரீராம் பஜன் (Shri Ram Bhajan)’ என்ற ஹேஷ்டாக்கில் பகிர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இவை அனைத்தும் பக்தி மற்றும் ஆன்மிக உணர்வாக மாறும். மக்கள் இராமரின் நெறிமுறைகளை பின்பற்றுவார்கள்” என்றார்.
பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியை உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும், டெல்லியில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் முதல்வர் பஜன்லால் ஷர்மாவும், அஸ்ஸாம் மாநிலம் திப்ருகாரில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவாலும் கண்டுகளித்தனர்.