2023 ஆண்டின் முக்கிய வழக்குகளும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
1)ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அங்கு 2024 செப்டம்பர் மாத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கவே சட்டப்பிரிவு 370 இருந்தது.
இந்தியாவில் இருந்து அதனை பிரிப்பதற்காக அல்ல. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. இதற்காக அவர் சட்டப்பிரிவு 370(3)ஐ பயன்படுத்தியதில் தவறு இல்லை. குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது செல்லுபடியாகும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2) பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது,பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் மோடி சமூகத்தினரை ராகுல் அவமதித்து விட்டதாக, குஜராத் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் ராகுல்காந்தியின் எம்பி பதவியும் பறிபோனது. பின்னர் மேல்முறையீட்டில் 2 ஆண்டு தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
3)திருமணமான பெண் கர்ப்பமாகி 26 வாரத்தில் தன்னுடைய கருவை கலைக்க அனுமதி கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் தனது 26 வார கருவை கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பொருளாதார அடிப்படையிலும், உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் 3 வது குழந்தையை பெற்று வளர்க்கும் நிலையில் இல்லை என அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புக்களை வழங்கியதால் வழக்கு தலைமை நீதிபதியிடம் சென்றது.பெண்ணின் பிரசவ காலமான 24 வாரங்களை கடந்துவிட்டதாகவும், மேலும் கரு நல்ல நிலையில் இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சந்திரசூட், கருவை கலைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.
4)ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரே பாலினத்தவர் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க கோரி நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
அப்போது ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஒரே பாலின திருமணத்துக்கு நீதிமன்றம் சட்ட அங்கீகாரம் அளிக்க முற்படும் நடவடிக்கை என்பது தற்போதைய சூழலுக்கு சரியாக இருக்காது என வாதிட்டப்பட்டது. ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என தீர்ப்பு அளிக்கப்பட்டது.
5)பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி ஆகிய 3 பேர் அடங்கிய குழுதான் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.
இதன்படி, மத்திய அரசு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி ஆகிய 3 பேர் அடங்கிய குழுதான் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது.
ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல்ஆணையர்கள் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவது இந்தியாவில் வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
6)சொத்து குவிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதனால், அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பொன்முடி இழந்தார்.
ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லாததால் கடந்த 2016-ஆம் ஆண்டு பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
7)மத்திய அரிசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மேற்கொண்ட ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்த நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 58 மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ஜனவரி 2-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அரசியல் சாசன அமர்வில், 4 நீதிபதிகள் பண மதிப்பிழப்பு செல்லும் என்று தீர்ப்பு வழங்கினர்.
கருப்புப் பணத்தை ஒழித்தல், பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களைக் கருத்தில் கொண்டே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அரசு நிர்வாகத்தின் பொருளாதார கொள்கைகளுக்குள் வருவதால் அதை ரத்து செய்ய இயலாது என்றும் பெரும்பாலான நீதிபதிகள் தெரிவித்தனர்.