இந்த ஆண்டில் விண்வெளி, விளையாட்டு என பல்வேறு துறைகளிலும் நாம் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறோம். இந்தியாவின் இந்த சாதனைகள் அடுத்த ஆண்டிலும் தொடர வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நடந்த 108-வது “மன் கி பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பேசுகையில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். இன்று 108-வது “மன் கி பாத்” அத்தியாயங்களில் பொதுமக்களின் பங்கேற்புக்கான பல எடுத்துக் காட்டுகளை பார்த்தோம். அவர்களிடமிருந்து உத்வேகத்தை பெற்றுள்ளோம்.
108 எண்ணின் முக்கியத்துவமும், புனிதத்தன்மையும் ஆய்வு செய்யப்பட்டது. மாலை மணிகள் 108, ஜெபம் 108, கோவில்படிகள் 108 என இந்த எண் அபரிமிதமான நம்பிக்கை கொண்டது. இன்று புதிய ஆற்றலுடனும், வேகத்துடனும் புதிதாக வளர வேண்டும் என்று நாம் தீர்மானிக்க வேண்டும்.
நாளைய சூரிய உதயம் 2024-ம் ஆண்டின் முதல் சூரிய உதயமாகும். நாம் 2024-ம் ஆண்டுக்குள் நுழைகிறோம். இந்தியா தன்னம்பிக்கையால் நிறைந்துள்ளது. வளர்ந்த இந்தியாவின் உணர்வால், தன்னம்பிக்கை உணர்வோடு திகழ்கிறது. 2024-ம் ஆண்டி லும் அதே உணர்வையும் வேகத்தையும் நாம் பராமரிக்க வேண்டும்.
இந்த ஆண்டில் விண்வெளி, விளையாட்டு என பல துறைகளிலும் நாம் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறோம். இந்த ஆண்டு நமது விளையாட்டு வீரர்கள் சிறப்பான விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தினர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 107 பதக்கங்களையும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 111 பதக்கங்களையும் வென்றனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தங்களின் செயல்பாடு மூலம் நமது வீரர்கள் நாட்டு மக்களின் மனங்களை வென்றனர்.
அதேபோல, அடுத்த ஆண்டு (2024-ல்) பாரீஸ் ஒலிக்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக, ஒட்டுமொத்த தேசமும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது. இந்தியா தன்னம்பிக்கையால் நிரம்பி வழிகிறது. 2024-ம் ஆண்டிலும் அதே உற்சாகத்தையும், வேகத்தையும் நாம் பராமரிக்க வேண்டும். இந்தியாவின் சாதனைகள் அடுத்த ஆண்டிலும் தொடர வேண்டும்” என்றார்.