சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அயோத்தி இராமர் கோவிலுக்கு 300 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமான இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது வரை 900 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கும் நிலையில், கோவில் கருவறை உள்ளிட்ட முக்கியப் பணிகள் நிறைவடைந்திருக்கின்றன.
இதையடுத்து, அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இக்கும்பாபிஷேத்துக்கு கோடிக்கணக்கானோரை திரட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
இதற்காக தமிழகத்தில் மட்டும் 1 கோடி பேருக்கு அழைப்பிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜனவரி 1-ம் தேதி முதல் அழைப்பிதழ் வழங்கும் பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முக்கியப் பிரமுகர்களுக்கு இன்றே அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி உணவு வழங்கவும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக, ஏராளமான மெட்ரிக் டன் அரிசி தேவைப்படும். அதேபோல, பகவான் ஸ்ரீராமருக்கு உணவுப் பதார்த்தங்களாக தயாரித்து படைப்பதற்கும் தரமான அரிசிகள் தேவை.
இந்த நிலையில், பகவான் ஸ்ரீராமரு்ககு படைப்பதற்காக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து நறுமணம் கொண்ட 300 மெட்ரிக் டன் தரமான அரிசி வகைகள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. 11 கனரக ட்ரக்கள் ஆயிரக்கணக்கான மூட்டைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டுச் சென்றிருக்கின்றன.
இந்த வாகனங்களை அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்த உணவுப் பதார்த்தங்கள் ஸ்ரீராமருக்கு படைக்கப்பட்ட பிறகு, பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யப்படும்.