கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர் மசரத் ஆலமின் முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கும் தடை விதித்திருக்கிறது.
தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அமைப்புகளுக்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தடை விதித்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு (பி.எஃப்.ஐ.) மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்பு, தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பது மற்றும் ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ மக்களை துாண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி, அந்த அமைப்புக்கு தடை விதித்தது.
இந்த நிலையில், தற்போது தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கும் மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்பு சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்படுகிறது.
இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்காக, தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரங்களைச் செய்ததிலும், பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதிலும் இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தீவிரவாதத்துக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மையைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் எந்த ஒரு தனி நபரோ, அமைப்போ ஈடுபட்டால் உடனடியாக முறியடிக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.
ஜமாத் இ இஸ்லாமி காஷ்மீர் அமைப்பில் இருந்த சையத் அலி ஷா கிலானி, அவ்வமைப்பில் இருந்து வெளியேறி, தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்பை கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கினார். இவர், பாகிஸ்தான் ஆதரவாளராகவும், காஷ்மீரி ஜிகாதி குழுக்களின் தலைவராகவும் கருதப்படுகிறார்.
சையத் அலி ஷா கிலானியின் மறைவுக்குப் பிறகு, அவ்வமைப்பின் தலைவராக மசரத் ஆலம் பட் பொறுப்பேற்றார். இவரும், இந்திய எதிர்ப்பு மற்றும் பாகிஸ்தானிய ஆதரவுக்குப் பெயர் பெற்றவர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.