அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் நேரில் அழைப்பிதழ் வழங்கினர்.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் எளிதில் செல்லும் வகையில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையம், மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமர் மோடி ஓரிரு நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் அழைப்பிதழ் வழங்கும் பணியை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடங்கியுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கினர்.அதேபோல் தினமலர் வெளியீட்டாளர் ஶ்ரீ இலட்சுமிபதிக்கு ஆர்எஸ்எஸ் சார்பில் நேற்று அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும்,முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் இராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை நேரில் வழங்கினர்.