பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 10 ரூபாய் வரை குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்களி வெளியாகி இருக்கிறது.
கடந்த 2022 மே 22-ம் தேதிக்கு பிறகு கடந்த 588 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த சூழலில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலில், “கடந்த 3 மாதங்களாக இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர் முதல் 80 டாலருக்குள் இருக்கிறது. எனவே, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலைக் குறைப்பு தொடர்பாக நிதி அமைச்சகமும் பெட்ரோலிய அமைச்சகமும் ஆலோசனை நடத்தின.
மதத்துக்கு 2 முறை என கடந்த சில மாதங்களாக இரு அமைச்சகங்களும் இந்த ஆலோசனையில் ஈடுபட்டன. அப்போது, பெட்ரோலுக்கு எவ்வளவு விலை குறைக்கலாம், டீசலுக்கு எவ்வளவு விலை குறைக்கலாம் என்பது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, பெட்ரோல், டீசலுக்கு தலா 10 ரூபாய் வரை குறைக்கலாம் என்று இரு அமைச்சகங்களும் முடிவு செய்தன. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு தொடர்பான பரிந்துரையை நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
எனவே, ஆங்கிலப் புத்தாண்டு பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும்” என்று தெரிவிக்கிறார்கள்.