16-வது நிதி ஆணையத்தின் தலைவராக டாக்டர் அரவிந்த் பனகாரியாவை மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது.
மத்திய அரசு 16-வது நிதிக் குழுவை அமைத்திருக்கிறது. இந்த ஆணையத்தின் தலைவராக நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவரும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் அரவிந்த் பனகாரியாவை நியமனம் செய்திருக்கிறது.
அதேபோல, இந்த ஆணையத்தின் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரித்விக் ரஞ்சனம் பாண்டே நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு தனித்தனியாக அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வரிகளின் நிகர வருவாயை யூனியன் மற்றும் மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளிப்பது மற்றும் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் வளங்களுக்கு துணையாக ஒரு மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களில் ஆணையம் பரிந்துரைகளை செய்யும்.
மேலும், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் உருவாக்கப்பட்ட நிதியைக் குறிப்பிடுவதன் மூலம், பேரிடர் மேலாண்மை முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பது குறித்த தற்போதைய ஏற்பாடுகளை ஆணையம் மதிப்பாய்வு செய்து, அதற்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும். 2025-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு நிதி ஆயோக் கோரப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறது.
நிதி கமிஷன் என்பது, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே நிதி உறவுகளை வரையறுக்க உருவாக்கப்பட்டதாகும். அதாவது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வரியை பகிர்ந்தளிப்பதற்கான பார்முலாவை வகுத்தல், பேரிடர் மேலாண்மைக்கு வழங்கப்படும் நிதியை மதிப்பாய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை நிதி ஆணையம் மேற்கொள்ளும்.
நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா மற்றும் உறுப்பினர்கள், தாங்கள் பதவியேற்கும் தேதியிலிருந்து அறிக்கை சமர்ப்பிக்கும் தேதி அல்லது 2025-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி வரை, எது முந்தையதோ அதுவரை பதவியில் இருப்பார்கள்.