ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில், எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோமீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.
இது புவி வட்டப்பாதையில் இருந்து விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலா உள்ளிட்டவற்றை ஆராய்ச்சி செய்ய உள்ளது.
மேலும், காலநிலை பற்றி ஆய்வு செய்வதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் உருவாக்கிய வெசாட் என்ற செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. மேலும், வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.
நேற்று காலை கவுன்டவுன் தொடங்கிய நிலையில், இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் கண்டு ரசித்தனர்.
புத்தாண்டின் முதல் நாளில் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.