2024ஆம் ஆண்டு தோனியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது, இது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி 2020ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
அன்றிலிருந்து இன்றுவரை வெறும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே தோனி விளையாடி வருகிறார். இந்த நிலையில் தோனி கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் ஆண்டாக 2024 இருக்கும் என கருதப்படுகிறது.
தோனி கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் தம் மீது வைத்திருக்கும் அன்புக்காக மேலும் ஒரு சீசன் விளையாட ஆசைப்படுவதாக கூறியிருந்தார்.
இதற்காக தோனி காயத்திலிருந்து குணமடைய அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் தோனி இத்துடன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இதனால் அவர்களை சமாளிக்க வேண்டும் என்றால் சிஎஸ்கே அணியால் மட்டுமே முடியும்.
சிஎஸ்கே அணியில் தற்போது பல புதிய வீரர்கள் அணிக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிய பொறுப்பை வழங்கி அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணி எப்படி இருக்க போகிறது என்பதற்கான விதையை தோனி 2024 ஆம் ஆண்டு விதைக்க வேண்டும். இதற்கு அவர் பல தியாகங்களை செய்தாக வேண்டும்.
தோனி இந்த ஐபிஎல் சீசனில் கேப்டனாக கூட விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. எதிர்காலத்துக்கு தேவையான சிஎஸ்கே அணியை கட்டமைப்பது, சிஎஸ்கே அணி அடுத்த கேப்டனை தேர்வு செய்வது, கடந்த சீசனில் பேட்டிங்கில் விளையாடாமல் இருந்த தோனி புதிய சீசனில் எப்படி விளையாடப் போகிறார் என்பதற்கான திட்டத்தை தீட்டுவது என்று பல சவால்கள் அவருக்கு காத்திருக்கிறது.
இதில் முக்கிய சவாலே தமக்கு பிடித்த ரசிகர்களை விட்டு எப்படி குட் பாய் சொல்வது என்பதே தோனிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.