உலகம் முழுவதும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள லால்சௌக்கில் இதுவரை இல்லாத வகையில், புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்தாடி வந்தது. இதனால், உள்ளூர் மக்கள் வெளியில் வருவதற்கே அச்சப்பட்டனர். காய்கறி மார்க்கெட், ஷாப்பிங் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் வெளியில் செல்வது மிகவும் அரிதிலும் அரிதாக இருந்தது.
இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு, தற்போது ஆளுநரின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, மாநிலத்தில் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் வேரறுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.
இதைத் தொடர்ந்து, அம்மாநில மக்கள் தைரியமாக வெளியில் சென்று வருகின்றனர். அதோடு, அம்மாநிலத்துக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் தைரியமாகச் சென்று வருகின்றனர். புகழ்பெற்ற தால் ஏரி இங்குதான் இருக்கிறது.
மேலும், ஜம்மு காஷ்மீரில் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் பண்டிகைகளும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்து சூழலில், 2024 புத்தாண்டு தினம் நேற்று இரவு முதல் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள லால்சௌக்கில் எப்போதும் இல்லாத அளவிக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மாநில சுற்றுலாத்துறைதான் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதன்படி, இசை நிகழ்ச்சியோடு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், வான வேடிக்கை என லால்சௌக் பகுதியே அமளிதுமளிப்பட்டது. இதைக் கண்டு வியந்துபோன உள்ளூர்வாசிகள் இதுவரை இதுபோன்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தை நாங்கள் பார்த்ததே இல்லை என்று வாய்பிளக்கிறார்கள்.
ஸ்ரீநகரின் காந்தாகர் மணிக்கூண்டு பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முகமது யாசீன் என்பவர், “புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்க்க நான் இங்கே வந்தேன். இதுபோன்ற கொண்டாட்டத்தை இதற்கு முன்னதாக நான் பார்த்ததே இல்லை. அதுவும் லால்சௌக் பகுதியில் இதுபோன்று பார்த்ததே கிடையாது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என்றார்.
ஜம்மு காஷ்மீர் அமைதியாக இருக்க வேண்டும். மாநில மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். புத்தாண்டை முன்னிட்டு, லால்சௌக் பகுதிகள் மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை, மாநில மக்களின் அமைதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.