ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயர்மட்டக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் காவல்துறை டி.எஸ்.பி., 2 இராணுவ மேஜர்கள், இராணுவ வீரர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை மற்றும் வளர்ச்சிப் பணிகளின் வேகம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தலைமைச் செயலாளர் அடல் டுல்லோ, டி.ஜி.பி. ஆர்.ஆர்.ஸ்வைன், துணை இராணுவப் படைகளின் தலைவர்கள் மற்றும் பிற பாதுகாப்பு ஏஜென்சிகள் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில், ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளாக அமலில் உள்ள மத்திய அரசின் ‘ஜீரோ டெரர்’ திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. அதேபோல, சமீபத்தில் பூஞ்ச் மற்றும் ரஜோரியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
இக்கூட்டத்தின்போது, ரஜோரி மாவட்டத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள குகைகளில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த விரிவான அறிக்கையை பாதுகாப்பு முகமைகள் சமர்ப்பிக்கும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசின் தீவிரவாத எதிர்ப்பு நிறுவனமான என்.ஐ.ஏ.வின் டைரக்டர் ஜெனரல் (டிஜி) மாநிலத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து ஏஜென்சியின் நடவடிக்கை குறித்த அறிக்கையையும் சமர்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் 2026-க்குள் ‘ஜீரோ டெரர்’ திட்டத்தை முழுமையாக செயல்படுத்த மோடி அரசு இலக்கு நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது.