ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் “ஸ்ரீராம், ஜெய்ராம், ஜெய் ஜெய் ராம்” என்று முஸ்லிம்கள் முழக்கமிடுமாறு ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் வலியுறுத்தி இருக்கிறார்.
டெல்லியில் “ராம் மந்திர், ராஷ்டிர மந்திர் – ஒரு பொதுவான பாரம்பரியம்” என்கிற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு உறுப்பினரும், முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்.ஆர்.எம்.) தலைமை புரவலருமான இந்திரேஷ் குமார், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய இந்திரேஷ் குமார், “இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் 99 சதவீதம் பேர் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். எங்களுக்கு பொதுவான மூதாதையர்கள், பொதுவான முகங்கள் மற்றும் பொதுவான அடையாளம் உள்ளது. நாம் அனைவரும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.
எங்களுக்கும் வெளிநாட்டினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகவே, ஜனவரி 22-ம் தேதி அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, தர்காக்கள், மக்தாப்கள், மதரஸாக்கள் மற்றும் மஸ்ஜித்களில் ‘ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்’ என்று 11 முறை முழங்குங்கள். மீதி நேரங்களில் நீங்கள் உங்கள் வழிபாட்டைப் பின்பற்றுங்கள்.
அதேபோல, குருத்வாராக்கள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து மதத் தலங்களை ஜனவரி 22-ம் தேதியன்று இரவு 11-2 மணிக்குள் தங்கள் இபாதத் கா மற்றும் பிரார்த்தனைக் கூடங்களை பிரமாதமாக அலங்கரித்து, இராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தொலைக்காட்சியில் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியாவிலும் உலகெங்கிலும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். மேலும், இந்துக்கள் அல்லாத அனைவரும் மாலையில் “சிராக்” (தியாஸ்) விளக்குகளை ஏற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
அதோடு, இராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, அனைவருக்கும் சொந்தமானவர் என்று பரூக் அப்துல்லா கூறியிருக்கிறார். நாங்கள் எப்போது அவர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் என்று சொன்னோம். அவரது மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் அப்படிக் கருதுகிறார்கள்.
அப்துல்லா முடிந்தால் அவர்கள் அனைவருக்கும் புரிய வைக்கட்டும். மேலும், ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என்பதை அவர் இந்தியக் கூட்டணிக்குச் சொல்ல வேண்டும். கும்பாபிஷேக விழாவில் யார் எல்லாம் வருகிறார்கள் என பார்க்கலாம். அதில் கலந்து கொள்ள அழைப்பிதழ் எல்லாம் கட்டாயம் இல்லை. எனவே, அதைக் காரணமாகச் சொல்ல வேண்டாம்” என்றார்.