காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்டதை விட மாநிலங்களுக்கு 2.5 மடங்கு கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளையும் அவர் தொடங்கியும் வைத்தார். பின்னர் விழாவில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
2004-2014 ஆம் ஆண்டு வரை மாநிலங்களுக்கு ரூ.30 லட்சம் கோடி வழங்கப்பட்டது, ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மாநிலங்களின் வளர்ச்சிக்கு, மத்திய பாஜக அரசு ரூ.120 லட்சம் கோடி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். 2004-2014ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டதை விட 2.5 மடங்கு கூடுதல் தொகையை தமிழகத்திற்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஓராண்டில் 40க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் சுமார் 400 முறை வருகை தந்துள்ளனர்.தமிழகம் வேகமாக முன்னேறும் போது நாடும் வேகமாக முன்னேறும் என மோடி கூறினார். கடலோரப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும்,மீனவர்களின் வாழ்க்கையை மாற்றவும் பல பணிகளைச் செய்துள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். முதன்முறையாக, கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மீனவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டதகாவும் பிரதமர் குறிப்பிட்டார்.