கடந்தாண்டு மே மாதம் 25-ம் தேதி அன்று, அன்றைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தச் சென்றனர்.
அப்போது, சோதனைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் திமுகவினர் மிரட்டியதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், அதிகாரிகளை தாக்கி, வாரண்ட் நகல், அரசு முத்திரைகள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாக திமுகவினர் மீது வருமானவரித்துறையினர் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து திமுகவைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட திமுகவினருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இனை எதிர்த்தும், ஜாமீனை ரத்து செய்யக் கோரியும், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வருமான வரித் துறையினர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற திமுகவைச் சேர்ந்த ரீகன், ராஜா, சரவணன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு கரூர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.