இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுமின் நிலையங்கள் குறித்த பட்டியல் பரஸ்பரம் பரிமாறப்பட்டிருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், தங்களது நாட்டில் உள்ள அணு மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தவிர்க்கும் வகையில், அணு மின் நிலையங்கள் மீதான தாக்குதலைத் தடை செய்வது என்று கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் இரு நாடுகளும் அணு மின் நிலையங்கள் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வது கட்டாயம்.
அந்த வகையில், இரு நாட்டுத் தூதரகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே அணு மின் நிலையங்கள் குறித்த தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
அதன்படி, பாகிஸ்தானின் அணுமின் நிலையங்கள் குறித்த தகவல் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல, இந்தியாவின் அணுமின் நிலையங்கள் குறித்த தகவல்கள் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள அணுமின் நிலையங்கள், வசதிகள் குறித்த பட்டியல் டெல்லி மற்றும் இஸ்லாமாபாதில் உள்ள தூதரகங்கள் வழியாக பரிமாறிக் கொள்ளப்பட்டன.
அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பரிமாறிக் கொள்ளப்படும் 33-வது பட்டியல் இதுவாகும். முதல் பட்டியல் கடந்த1992-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பரிமாறிக் கொள்ளப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.