இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எந்த வகையிலும் பணம் வசூலிக்க யாருக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை என்றும், எனவே மோசடி நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்றும் கிரிமினல் மோசடி நாடு முழுவதும் முளைத்துள்ளதாகவும், மோசடி செய்பவர்கள் கோயிலுக்கு நன்கொடை வசூலிப்பதாகக் கூறி போலி QR குறியீடுகளைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றவாளிகள் கோவிலின் பெயரில் நன்கொடை கோரி சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அபிஷேக் குமார் என அடையாளம் காணப்பட்ட ஒரு மோசடி பேர்வழி, அயோத்தி கோயில் வளர்ச்சிக்காக பல்வேறு ஆன்லைன் குழுக்களில் செய்திகளை வெளியிட்டு, அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு செல்லும் பணத்தைப் பெறுவதற்காக நிதி கோரி வந்ததை விஹெச்பி வெளிப்படுத்தியுள்ளது.
அவன் UPI QR குறியீடுகளை ஃபேஸ்புக் குழுக்களில் ‘ராம் மந்திர் அயோத்தி சந்தா பிரதர்ஷன் கரேன்’ என்ற வரியுடன் பதிவிட்டுள்ளான் என்றும் எச்சரித்துள்ளது. அயோத்தியைச் சேர்ந்த விஹெச்பி உறுப்பினர் ஒருவர் குமாரிடம் தொலைபேசியில் பேசியபோது, “உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள். உங்கள் பெயரும் எண்ணும் டைரியில் குறிப்பிடப்படும். கோவில் கட்டி முடிக்கப்பட்டதும், நீங்கள் அனைவரும் அயோத்திக்கு அழைக்கப்படுவீர்கள் என அவன் கூறியதாக தெரிவித்துள்ளார்.
கோவிலின் கட்டுமானம் மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பெயரையும் மோசடி செய்பவர்கள் பக்தர்களிடம் பணம் பெற பயன்படுத்துகின்றனர்.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எந்த வகையிலும் பணம் வசூலிக்க யாருக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை. மேலும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்பவர்கள் மோசடியான முறையில் மக்களை ஏமாற்ற விரும்புகிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விஎச்பியின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவித்துள்ளார்.