உலக புகழ் பெற்ற சபரிமலையில் வரும் 10 -ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுவதாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகரவிளக்கு பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில்நடை கடந்த மாதம் 30 -ம் தேதி திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுவாமி தரிசனத்துக்காகப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 2024-ம் ஆண்டான புத்தாண்டையொட்டி நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சபரிமலையில் தரிசனம் செய்தனர். குறிப்பாக, பம்பை முதல் சன்னிதானம் வரை 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே, சபரிமலை வரும் பக்தர்களுக்காக ஸ்பாட் புக்கிங் தரிசனம் செய்யப்பட்டு வந்தது. இது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, வரும் 10 -ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
கும்பலை கட்டுப்படுத்தவே இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் திடீர் முடிவால், ஐயப்ப பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.