இஸ்லாமிய இளைஞர்களை தூண்டி விடாதீர்கள் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அஸாதுதீன் ஒவைசிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் பாவ்நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அஸாதுதீன் ஒவைசி பேசுகையில், “இளைஞர்களே, நாம் நமது மசூதியை இழந்து விட்டோம். தற்போது அங்கு என்ன நடந்து வருகிறது என்று நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இதனால் மனவேதனை ஏற்படவில்லையா?” என்று முஸ்லீம் இளைஞர்களை தூண்டி விடும் வகையில் பேசினார்.
இந்த நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின், “ராம ஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அஸாதுதீன் ஒவைசி தொடர்ச்சியாக விமர்சித்து வருவது நீதிமன்ற அவமதிப்பு எல்லைக்குள் வரும் விஷயமாகும்.
முஸ்லீம் சமூகத்தினரை மீண்டும் தூண்டி விடாதீர்கள் என்று ஒவைசி போன்ற தலைவர்களை எச்சரிக்க விரும்புகிறேன். ஒவைசி போன்றவர்கள், வளர்ச்சிக்கு மாறாக தவறான பாதையில் முஸ்லீம் சமூகத்தினரை தள்ளி விடுகிறார்கள்.
அயோத்தியில் இராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு நிறைவடையும் தருவாயில் இருப்பது ஒவைசி போன்ற தலைவர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது.
அதோடு, முஸ்லீம் சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் இராமர் கோவிலை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருப்பதும் அவர்களுக்கு மேலும் ஏமாற்றத்தை அதிகரித்து வருகிறது. இதன் வெளிப்பாடாகவே ஒவைசி போன்ற தலைவர்கள் இவ்வாறு பேசி வருகின்றனர்” என்றார்.