மணிப்பூரில் புத்தாண்டு தினத்தன்று 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்று பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதனால், மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்திருக்கிறது.
மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக, இரு வேறு சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில், 180 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர், மத்திய, மாநில அரசுகள் நடத்திய பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பி வந்தது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு போலீஸார் மீது மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இதில், கமாண்டோ ஒருவர் காயமடைந்தார். தொடர்ந்து, நேற்று ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று மணிப்பூருக்குள் புகுந்து அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள தௌபால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, கக்சிங் மற்றும் பிஷ்னுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. மேலும், சம்பவ இடத்துக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது, மியான்மர் எல்லை அருகே இருக்கும் மோரே நகருக்கு பாதுகாப்புப் படையினர் சென்றபோது, அவர்களது வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 4 கமாண்டோ போலீஸாரும், ஒரு எல்லை பாதுகாப்புப் படை வீரரும் காயமடைந்துள்ளனர். இவர்கள் அஸ்ஸாம் ரைபில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் பைரேன் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளை பிடிக்க காவலர்களை குவித்துள்ளோம்.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசுக்கு உதவுமாறு லிலாங்கில் (சம்பவம் நடந்த இடத்தில்) வசிப்பவர்களிடம் கைகளை கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன். சட்டத்தின் கீழ் நீதி வழங்க அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று உறுதியளிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.