ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடத்தில் விராட் கோலியை தவிர வேறு எந்த ஒரு இந்திய வீரர்களும் இல்லை.
இதன் முதலிடத்தில் 864 புள்ளிகளுடன் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் 859 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டும், மூன்றாம் இடத்தில் 820 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் உள்ளனர்.
சிஎஸ்கே புதிதாக வாங்கியுள்ள டாரல் மிட்செல் மூன்று இடங்கள் முன்னேறி தற்போது நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இதேபோன்று ஆஸ்திரேலிய உஸ்மான் கவஜா ஒரு இடம் பின்தங்கி ஐந்தாவது இடத்திற்கும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் பின்தங்கி ஆறாவது இடத்திற்கும் வந்திருக்கிறார்கள்.
இந்திய வீரரான விராட் கோலி முன்பு இருந்ததை விட நான்கு இடங்கள் முன்னேறி 9வது இடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 4 இடங்கள் சரிந்து 14வது இடத்திற்கு சென்றுள்ளார்.
இதேபோல் பந்துவீச்சாளருக்கான பட்டியலில் தமிழக வீரர் அஸ்வின் 872 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் 854 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா உள்ளார்.
மூன்றாவது இடத்தில் 841 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இருக்கிறார். ஜடேஜா 774 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பும்ரா 767 இடங்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 118 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், அதே புள்ளிகளை பெற்று ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் 115 புள்ளிகளை பெற்று இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.