குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (சி.ஏ.ஏ.) விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இவ்விதிகள் வெளியாகும் என்றும் மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய மதச் சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பெளத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சி இனத்தவருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019-ம் ஆண்டில் இயற்றப்பட்டது.
ஆனால், மதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திய குடியுரிமை வழங்கக் கூடாது என்று எதிர்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், இச்சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால், நாடாளுமன்றத்தில் இச்சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், அமல்படுத்துவதில் தாமதம் நிலவி வருகிறது.
அதேசமயம், இச்சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியாகக் கூறி வருகிறார். இந்த சூழலில்தான், மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், விதிகள் அறிவிக்கப்பட்டால்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியும்.
அதோடு, நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு விட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் அச்சட்டம் தொடா்பான விதிகளை வகுத்து, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இல்லாவிட்டால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் துணைச் சட்டக் குழுக்களிடம் கால அவகாசம் கோர வேண்டும். இப்படித்தான், கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து மத்திய உள்துறை அமைச்சகம் கால அவகாசம் கோரி வருகிறது.
ஆகவே, இனியும் காலதாமதம் செய்ய வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருதுகிறாராம். எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சி.ஏ.ஏ. தொடர்பான விதிகளை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, சி.ஏ.ஏ. சட்டப்படி மதச் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கலாம் என்றும் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.