அயோத்தி இராமர் கோவிலில் ஸ்ரீராமர் லல்லா பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22-ம் தேதியை தீபாவளி போல கொண்டாட வேண்டும் என்று கூறியிருக்கும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, கும்பாபிஷேகம் முடிந்து ஜனவரி 25 முதல் மார்ச் 25-ம் தேதி வரை தினமும் 50,000 பேர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “அயோத்தியில் உள்ள இராமர் கோவிலில் ஸ்ரீராமர் லல்லா பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22-ம் தேதியை நாட்டில் தீபாவளி போல கொண்டாடும் சூழலை பா.ஜ.க.வினர் உருவாக்க வேண்டும்.
அதேபோல, அயோத்திக்கு தரிசனத்திற்காக வரும் ஒவ்வொரு நபருக்கும் பா.ஜ.க. தொண்டர்கள் உதவ வேண்டும். யாரும் சிரமப்படாமல் பாரபட்சமின்றி தரிசனம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், ஜனவரி 25 முதல் மார்ச் 25-ம் தேதி வரை அயோத்தி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இது தொடர்பாக பா.ஜ.க. பிரச்சாரத்தை மேற்கொள்ளும். இப்பிரச்சாரத்தின் மூலம் தினமும் 50,000 பேர் தரிசனம் செய்ய பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்வார்கள்.
மக்கள் தங்கள் சொந்த செலவில் இராமர் கோவிலுக்குச் செல்வார்கள். அதேசமயம், அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடு உள்ளிட்டவற்றுக்கு பா.ஜ.க. உதவும். மேலும், பக்தர்கள் எளிதில் அயோத்திக்கு செல்லும் வகையில், 430 நகரங்களில் இருந்து அயோத்திக்கு தினமும் 35 இரயில்கள் இயக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.
இக்கூட்டத்தில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், பா.ஜ.க. பொதுச்செயலாளர் சுனில் பன்சால், மத்திய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ், அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.