கடந்த ஆண்டு விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தொடர்பான 5 ஆயிரத்து 745 வழக்குகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரித்தது.
விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்து மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், பாதுகாப்பு தரத்தை மேம்படுத்த 542 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு, டிஜிசிஏ பல்வேறு நிறுவனங்களுக்கு ரூ. 2 கோடியே 75 இலட்சம் அபராதம் விதித்தது. கடந்த 2022-ல் ரூ. 1 கோடியே 97 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டை விட 2023-ஆம் ஆண்டில் 39 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த 2022-ஆம் ஆண்டை விட கண்காணிப்பு நடவடிக்கைகளின் எண்ணிக்கை 26 சதவீதம் அதிகரித்துள்ளது. கூடுதலாக, விதிகளுக்கு இணங்காத விமான நிறுவனங்கள் மற்றும் பிற அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் 77 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில், இதுபோன்ற 305 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளின் கீழ், ஏர் இந்தியா, ஏர் ஏசியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஏர் இந்தியாவின் பயிற்சி வசதிகளுக்கான அனுமதியை ஒழுங்குமுறை நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இது தவிர, தவறு செய்த விமானிகள், பணியாளர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், திட்டமிடப்படாத விமான நிறுவனங்கள், விமானப் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய ஆபரேட்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.