மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, முத்தலாக் தடை உள்ளிட்ட வாக்குறுதிகளை பா.ஜ.க. நிறைவேற்றி இருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்படும். இஸ்லாமிய பெண்கள் படும் துயரைத் துடைக்கும் வகையில் முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருந்தது.
அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டு முத்தலாக் தடைச் சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியது. இது இஸ்லாமியப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இதையடுத்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கேரளாவில் மகளிர் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, இன்று காலை லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, சிறப்பு விமானம் மூலம் கேரளாவின் நெடும்பசேரிக்கு பிற்பகலில் வந்தடைந்தார். பின்னர், அங்கிருந்து திருச்சூர் தேக்கங்காடு மைதானத்துக்கு காரில் பேரணியாகச் சென்றார்.
அப்போது, வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் பிரதமர் மோடிக்கு மலர்தூவி வரவேற்றனர். தொடர்ந்து, திருச்சூர் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூட்டத்தில், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா, கிரிக்கெட் வீராங்கனை மின்னுமணி, சமூக ஆர்வலர் உமா பிரேமன், நடிகை சோபனா, முதியோர் ஓய்வூதியத்தைப் போராடி பெற்ற 88 வயது மூதாட்டி மரியக்குட்டி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “என்னை வாழ்த்துவதற்கு ஏராளமான பெண்கள் கூடியிருப்பது பெருமையாக இருக்கிறது. நான் காசி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவன். அங்கே காசி விஸ்வநாதர் இருக்கிறார்.
இங்கே, வடக்குன்னாதன் கோவிலில் சிவன் இருக்கிறார். கேரளாவின் கலாச்சார நகரான திரிச்சூரில் புதிய சக்தி வெளிப்பட்டிருக்கிறது. இந்த சக்தி ஒட்டுமொத்த கேரளாவிலும் எதிரொலிக்கும்.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார், நாட்டின் மிகச் சிறந்த ஆசிரியையும் சமூக சீர்திருத்தவாதியுமான சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பிறந்த நாள் இன்று. இந்த இருவரும் பெண் சக்தி எத்தகைய ஆற்றல் கொண்டது என்பதை நமக்கு கற்பித்திருக்கிறார்கள்.
மேலும், நாட்டின் சுதந்திரத்துக்கும், கலாச்சாரத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் கேரளாவின் மகள்கள் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். குட்டிமாலு அம்மா, அக்கம்மா செரியன், ரோசம்மா புன்னூஸ் போன்றவர்கள் மிகவும் துணிச்சலாக நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டிருக்கிறார்கள்.
சுதந்திரத்துக்குப் பிறகு கேரளாவை மாறி மாறி ஆட்சி செய்து வரும் மார்க்ஸிஸ்ட் தலைமையில் உள்ள இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பெண் சக்தியை பலவீனம் என்று கருதின.
இதன் காரணமாகவே, மக்களவையிலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அக்கட்சிகள் தடையை ஏற்படுத்தின. ஆனால், உங்கள் உரிமை உங்களுக்கு வழங்கப்படும் என நான் வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றி இருக்கிறேன்.
அதேபோல, முத்தலாக் காரணமாக இஸ்லாமிய சகோதரிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தார்கள். ஆனால், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி, முஸ்லீம் சகோதரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை.
அதேசமயம், முத்தலாக்கில் இருந்து முஸ்லீம் சகோதரிகளுக்கு விடுதலை கொடுப்பேன் என்று நான் வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியையும் நான் நிறைவேற்றி இருக்கிறேன். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க நாங்கள் ஏராளமான திட்டங்களை முன்னெடுத்தோம்.
உதாரணமாக, உஜ்வாலா திட்டத்தின் மூலம் 10 கோடி கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. 11 கோடி குடும்பங்களுக்கு குழாய் வழியாக தூய குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நாட்டில், இன்று பெரிய சாலைகள், நவீன விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
ஆனால், மோடி எதிர்ப்பை மட்டுமே கொண்டிருக்கும் கேரள ‛இண்டி’ கூட்டணி அரசால் எந்த பணிகளும் நடக்கவில்லை. ஏழை மக்களுக்காகவும், உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகவும் மத்திய அரசு அளிக்கும் நிதி குறித்து கேள்வி கேட்பதை அவர்கள் விரும்புவதில்லை. அதோடு, அவர்கள் மத்திய அரசின் திட்டங்களை மறைக்க முயற்சி செய்கின்றனர்.
‛இண்டி’ கூட்டணிக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் தெரியும். அதுதான் ஊழல். அக்கூட்டணியினர் நமது நம்பிக்கையை காயப்படுத்துகின்றனர். நமது கோவில்கள், பண்டிகைகளை கொள்ளையடிப்பதற்கான மையமாக மாற்றி வருகின்றனர்.
இது மாதிரியான அரசியல், ‛திரிச்சூர் பூரம்’ விழாவில் நடப்பது வேதனை அளிக்கிறது. சபரிமலையில் நடக்கும் மோசமான நிர்வாகத்தால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதுவே மாநில அரசின் இயலாமைக்கு சான்றாகும்” என்றார்.