கேரளாவில் புகழ் பெற்ற திருக்கோவில்களில் சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜையையொட்டி, நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கோவில் நடை திறப்பது வழக்கம்.
இதுதவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாவின் போதும் நடை திறக்கப்படும்.சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது.
இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ள நடப்பு ஆண்டுக்கான டைரியில் 2024 கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் படம் இடம்பெற்றுள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஐயப்பன் கோயிலில் விற்பனை செய்யப்பட்டு வரும் அந்த டைரியில், தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் படங்கள் எவ்வாறு கோயில் டைரியில் இடம்பெற முடியும் என்றும் பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆண்டுதோறும் வெளியாகும் அந்த டைரியில், சபரிமலை கோவில் நடை திறப்பு நாட்கள், பூஜை விவரங்கள், பூஜை கட்டணம் உள்ளிட்ட சபரிமலை தொடர்பான அனைத்து விவரங்கள் மற்றும் கேரளாவில் உள்ள முன்னணி கோவில்கள் மற்றும் சுவாமி படங்களும் இடம்பெற்றிருக்கும்.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக முதன்முதலாக பினராயி விஜயன் மற்றும் தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.