இராமர் கோவில் விவகாரம் தொடர்பாக, ஐதராபாத் மக்களவைத் தொகுதி எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவருமான ஒவைசி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் மீது இந்து சேனா அமைப்பு டெல்லி போலீஸில் புகார் அளித்திருக்கிறது.
அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. “இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மேலும், கும்பாபிஷேக விழா தொடர்பாக, வி.வி.ஐ.பி.க்கள், வி.ஐ.பி.க்கள் என பல்வேறு தரப்பிற்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும், ஐதராபாத் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான ஓவைசியிடம் உங்களுக்கு கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வந்ததா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு ஒவைசி அழைப்பிதழ் வந்தாலும், வராவிட்டாலும் அயோத்தி கும்பாபிஷேக விழாவுக்குச் செல்ல மாட்டேன் என்று கூறியதுடன், “நாம் நமது மசூதியை இழந்து விட்டோம். இனியாவது முஸ்லீம் இளைஞர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.
இன்றைய இளைஞர்களான நீங்கள் நாளைய குடிமகன்கள். உங்கள் இதயத்தில் வலி ஏற்படவில்லையா ? நம் மசூதிகளை காப்பாற்றவில்லை எனில் பறிபோய்விடும். உங்களின் கண்களை திறந்து வைத்துக்கொண்டு, உங்கள் ஊருக்கும், உங்களின் அண்டை வீட்டாருக்கும் உதவுவது போல ஒன்று பட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.
இந்த நிலையில், ஒவைசியின் இந்தக் கருத்துக்கு எதிராக இந்து சேனா அமைப்பின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா டெல்லி போலீஸில் புகார் அளித்திருக்கிறார். அப்புகாரில், பொறுப்பற்ற முறையில் பேசிய ஒவைசியின் கருத்து மத மோதல்களையும், இந்தியர்களின் ஒற்றுமையையும் சீர்குலைக்க முயற்சி செய்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.