பகவான் ஸ்ரீ ராமர் குறித்து ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷி பாடிய பக்தி பஜனை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 2.7 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதில் 57,400 சதுர அடியில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டதாக இக்கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.
மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளது. இந்த கோவிலுக்கு மொத்தம் 12 நுழைவு வாயில்கள் உள்ளன.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷி பாடிய குழந்தை இராமர் குறித்த பக்தி பாடலை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில்,ராமரின் பக்தியில் மூழ்கியிருக்கும் பக்தர்கள் வரவிருக்கும் புனித நாளுக்காக பல்வேறு வழிகளில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பக்தர்கள் அனைவரும் குழந்தை ராமரின் பாடல்களை கேட்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.