அயோத்தி நகரை சர்வதேச சுற்றுலா நகரமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான விவிஐபி விருந்தினர்கள் அயோத்திக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவிஐபி சுற்றுலா பயணிகளுக்கு தனி ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. அயோத்தியை நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு நகரமாக மாற்ற மின்சார கார் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
விவிஐபி சுற்றுலா பயணிகளுக்கு இனிமையான பயணத்தை வழங்க 12 மின்சார கார்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த 12 எலக்ட்ரிக் கார்களும் அயோத்தி கான்ட் ரயில் நிலையம், தாம் சந்திப்பு, மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் ஆகிய இடங்களில் விவிஐபிகளை வரவேற்க நிறுத்தப்பட்டுள்ளன.
ராமர் கோவிலுக்கு வரும் அனைவரும் இந்த மின்சார கார்களை பயன்படுத்தலாம். தற்போது 12 கார்கள் பயன்பாட்டில் உள்ளது.
ஜனவரி 22ம் தேதிக்குள் கூடுதல் கார்கள் கொண்டு வரப்படும். ராம ஜென்மபூமி, சூரஜ் குண்ட், சூர்யு நதி, பாரத் குண்ட் போன்ற அனைத்து வழிபாட்டு மையங்களுக்கும் இந்த மின்சார கார்கள் செல்ல உதவும். இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான கட்டணம் 10 கிமீ செல்ல 250 ரூபாய். 20 கிலோமீட்டருக்கு 400 ரூபாய் மற்றும் 12 மணி நேரத்திற்கு 3000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
சில நாட்களுக்குப் பிறகு, அயோத்தி வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மேலும் பல மின்சார கார் வசதி அதிகரிக்கப்படும். எதிர்காலத்தில் அனைத்து மின்சார கார்களும் மொபைல் செயலியுடன் இணைக்கப்படும். சுற்றுலா பயணிகள் தங்கள் மொபைல் செயலி மூலம் மின்சார கார்களை எளிதாக முன்பதிவு செய்ய முடியும்.
அயோத்தி கான்ட் ஸ்டேஷனுக்கு வரும் மக்களுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்களின் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. மின்சார கார்களில் பயணிப்பவர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அயோத்தி ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், அயோத்தியின் வளர்ச்சி மற்றும் மின்சார கார் பயணத்தை பாராட்டியுள்ளனர்.