தலைநகர் டெல்லியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நகரின் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி என்ற அளவில் உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 8 அல்லது அதற்கு கீழும் செல்கிறது. இதன் காரணமாக, மக்கள் கடுமையான குளிரை அனுபவித்து வருகின்றனர். மேலும், சாலைகளில் முழுவதுமாக பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால், வாகனங்கள் பகல் நேரங்களிலும், விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன.
இமயமலையில் பனிக்கட்டி அதிகமாக உருவாகி உள்ளதால், அதன் தாக்கம் வட மாநிலங்களில் எதிரொலித்திருப்பதாக கூறப்படுகிறது. குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், அதிகாலை வேளையில் பார்வைத்தூரம் குறையும் அளவுக்கு கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது.
தலைநகர் டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, இன்று இரயில்கள் செல்வதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி மட்டுமின்றி, இராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது.