உஜ்வாலா திட்டத்தின் 10-வது கோடி பயனாளிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி, பரிசளித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்தது. உதாரணமாக, ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம், வீடுதோறும் கழிப்பறை, அனைவருக்கும் வீடு, அனைத்து வீடுகளுக்கும் தூய சுகாதாரமான குடிநீர் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் கேஸ் இணைப்பு வழங்கும் ‘உஜ்வாலா’ திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில், இலவசமாக வழங்கப்படும் கேஸ் இணைப்புக்கான செலவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு செலுத்தி விடும்.
இந்த உஜ்வாலா திட்டத்தின் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்திருக்கிறது. இதில், 10-வது கோடி பயனாளி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மீரா மாஞ்சி என்பவர். இந்த சூழலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்துக்குச் சென்றிருந்தார்.
அப்போது, உஜ்வாலா திட்டத்தின் 10-வது கோடி பயனாளி மீரா மாஞ்சி பற்றி பிரதமர் மோடிக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மீரா வீட்டுக்கு நேரில் சென்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு டீக் குடித்ததோடு, அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், அக்குடும்பத்தினருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில், உஜ்வாலா திட்டத்தின் 10-வது கோடி பயனாளியான மீரா மாஞ்சிக்கு, பிரதமர் மோடி பாராட்டுக் கடிதம் எழுதி இருக்கிறார். மேலும், அவரது குடும்பத்துக்கு பரிசுகளையும் அனுப்பி வைத்திருக்கிறார்.
















