இந்தியா பாசிப் பருப்பு மற்றும் உளுந்துத் துறையில் தன்னிறைவு பெற்றிருந்தாலும், மற்ற பருப்பு வகைகளை இறக்குமதிதான் செய்து வருகிறது. எனினும், 2027-ம் ஆண்டுக்குள் பருப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறும் என்று அமித்ஷா கூறியிருக்கிறார்.
புதுடெல்லியில் துவரம் பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் பதிவு, கொள்முதல் மற்றும் பணம் செலுத்துவதற்கான போர்ட்டலை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “பருப்புத் துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதில் விவசாயிகள் எந்தவொரு வாய்ப்பையும் விட்டுவிட மாட்டார்கள். கடந்த 9 ஆண்டுகளில், பருப்பு உற்பத்தியை ஊக்குவிக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.
2013-14-ல் 19 மில்லியன் டன்னாக இருந்த பருப்பு உற்பத்தி, 2022-23-ல் 26 மில்லியன் டன்னாக உயர்ந்திருக்கிறது. விவசாயிகள் தங்களை இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பிலும், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பிலும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளிடமிருந்தும் மத்திய அரசு அனைத்து பருப்பு வகைகளையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும். ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் பருப்பு வகைகள் முக்கிய பங்கு வகிக்கும்.
தற்போதைய நிலையில், இந்தியா பாசிப் பருப்பு மற்றும் உளுந்துத் துறையில் தன்னிறைவு பெற்றிருந்தாலும், மற்ற பருப்பு வகைகளை இறக்குமதிதான் செய்து வருகிறது. எனினும், 2027-ம் ஆண்டுக்குள் பருப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறும்” என்றார்.