இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை சிந்திக்க லட்சத்தீவு பயணம் வாய்ப்பு அளித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் தமிழகம், லட்சத்தீவு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
லட்சத்தீவில் 1,150 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். கொச்சி-லட்சத் தீவுகள் நீர்மூழ்கிக் கப்பல் ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு (KLI – SOFC) திட்டம் மற்றும் கட்மட்டில் குறைந்த வெப்பநிலை வெப்ப உப்பு நீக்கம் (LTTD) ஆலையை அவர் திறந்து வைத்தார்.
இந்நிலையில் தமது லட்சத்தீவு பயணம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சமீபத்தில், லட்சத்தீவு மக்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன்.
அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதிகளில் மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன். இயற்கை அழகுடன், லட்சத்தீவின் அமைதி மெய்சிலிர்க்க வைத்தது.
140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை சிந்திக்க இது எனக்கு வாய்ப்பளித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் லட்சத்தீவு பயணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.