பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா மீதான எப்ஐஆரை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் மோடியின் தந்தைக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் (ஐபிசி 153 ஏ), அவதூறு (ஐபிசி 500), அவமதிப்பு (ஐபிசி 504) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனிடையே வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிடவில்லை என தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.