2024ம் ஆண்டிலும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழும் என்று ஐ.நா. வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர் ஆகிய காரணங்களால் வளர்ந்த நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியால் திணறி வருகின்றன. அதேசமயம், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி இருக்கிறது. கடும் சவால்களுக்கு மத்தியிலும் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது.
கடந்த 2023-ம் ஆண்டில் உலக அளவில் ஜி.டி.பி. அடிப்படையில் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு மதிப்பு 3.75 லட்சம் கோடி டாலராக (ரூ.311 லட்சம் கோடி) இருந்தது.
2021-22-ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு மதிப்பு 9.1 சதவீதம். இது 2022 – 23-ம் நிதியாண்டில் 7.2 சவீதமாகப் பதிவானது. இது சர்வதேச நிதி அமைப்புகளின் கணிப்பைவிட அதிகம். அதேபோல, 2023 – 24-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு மதிப்பு 7.8% வளர்ந்தது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி இதே வேகத்தில் சென்றால் 2030-க்குள் ஜெர்மனி, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், 2024ம் ஆண்டிலும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழும் என ஐ.நா., வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஐ.நா. வெளியிட்டிருக்கும் பொருளாதார அறிக்கையில், “2024-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும். இதுவே 2023-ம் ஆண்டு 6.3 சதவீதமாக இருந்தது.
இந்த ஆண்டில் உள்நாட்டுத் தேவை, உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளின் வளர்ச்சி காரணமாக இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும். 2024-லும் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழும்.
அரசின் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளால் உந்தப்பட்டு 2023-ல் இந்தியா வலுவான முதலீட்டை பெற்றது. வளர்ந்த நாடுகளை காட்டிலும் வளரும் நாடுகளில் முதலீடு சிறப்பானதாக இருந்தது. 2023-ல் தெற்கு ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் முதலீடு வலுவாக இருந்தது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.