சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்குக் கப்பல் ஒன்று கடத்தப்பட்டிருக்கும் நிலையில், அக்கப்பலை மீட்பதற்காக ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் விரைந்திருக்கிறது.
மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியா நாட்டின் கடற்பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்குக் கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டது. இக்கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “லைபீரிய நாட்டின் கொடி பறந்த MV LILA NORFOLK என்ற சரக்குக் கப்பல் சோமாலியா நாட்டின் கடற்பகுதியில் நேற்று கடத்தப்பட்டதாகவும், இக்கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
இக்கப்பல், நேற்று மாலை 5 முதல் 6 மணிக்குள் கடத்தப்பட்டிருக்கிறது. அடையாளம் தெரியாத 5 முதல் 6 பேர் வரையுள்ள நபர்கள், ஆயுதங்களுடன் வந்து கப்பலை கடத்தி இருக்கிறார்கள்.
இதையடுத்து, இந்திய கடற்படை உடனடி பதில் நடவடிக்கையை எடுத்தது. கடத்தப்பட்ட சரக்குக் கப்பல் இருக்கும் இடத்தை நோக்கி இந்திய கடற்படை விமானம் அனுப்பப்பட்டது. அதோடு, கடற்பாதுகாப்புக்கு உதவும் ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பலும் திருப்பி விடப்பட்டது.
இந்த நிலையில், கடத்தப்பட்ட கப்பல் இருக்கும் இடத்தை இந்திய கடற்படை விமானம் இன்று அதிகாலை கண்டறிந்ததோடு, அதனை கண்காணித்து வருகிறது. மேலும், கப்பலுக்குள் உள்ளவர்களோடு தொடர்பை ஏற்படுத்தி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது.
இந்த சூழலில், கடத்தப்பட்ட கப்பலை ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலும் நெருங்கி விட்டது. இந்த கடற்பிராந்தியத்தில் பாதுகாப்பை மேற்கொள்ளும் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த நிலைமையும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச பங்குதாரர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து இப்பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை உறுதியாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறது.