மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து திமுக கொள்ளையடிக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில், நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
கெங்கவல்லி ஓமலூர் பகுதிகள், மைசூருடன் இணைக்கும் கணவாய் அமைந்துள்ள முக்கியமான பகுதிகளாக விளங்கின. ரோஜா, சாமந்தி, மல்லிகைப் பூ என 5,000 ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி நடைபெறும் மண். திருப்பதி பகவான் ஏழுமலையானை அலங்கரிக்கும் சாமந்திப்பூ, ஓமலூரிலிருந்து செல்கிறது என்பது இந்த மண்ணுக்குப் பெருமை.
வரும் ஜனவரி 22 அன்று, அயோத்தி ஸ்ரீராமர் கோவிலில், கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் பக்தர்கள் நிதி வழங்கி, ராமர் கோவிலை எழுப்பியுள்ளார்கள். கோவிலுக்கு அதிகம் நிதி வழங்கியதில், தமிழகம் இந்திய அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. ராமருக்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது என்கிறார்கள். ராமர் வைகுண்டம் சென்றடைய, சரபங்கா முனிவர் யாகம் நடத்திய மண் ஓமலூர்.
அவர் பெயரிலேயே சரபங்கா நதியும் இங்கு உள்ளது. மேலும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோட்டை மாரியம்மன் கோவில், கோட்டை பெருமாள் கோவில், வசந்தீஸ்வரர் கோவில்கள் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளன. இங்கு இருந்து கொண்டு, சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்கிறார்கள்.
இத்தனை அற்புதமான கலாச்சாரமும், சரித்திரமும் உடைய நம் தமிழகத்தில், ஜாதியை வைத்து அரசியல் செய்து, மக்களைப் பிரித்து சூழ்ச்சி செய்து, ஜாதி அரசியல் இன்றும் தமிழகத்தில் இருக்கக் காரணம், திமுக மட்டும்தான்.
இத்தனை ஆண்டு காலமாக போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் திமுகவை முழுவதுமாக நம் மண்ணில் இருந்து புறக்கணிக்க வேண்டும். காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி மத்தியில் நடந்த போது, எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை நிலவியது. 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்து, உலக அரங்கில் நமது நாடு பின்தங்கி இருந்தது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, உலக அரங்கில் இந்தியா பல மடங்கு முன்னேறியிருக்கிறது.
ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாத நேர்மையான நல்லாட்சி கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மக்கள் பாரதப் பிரதமரை ஆதரிக்கிறார்கள். பெண்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் பிரதமர் மோடி அவர்கள் நலத்திட்டங்களால் பயனடைந்துள்ளார்கள்.
சேலம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், மக்களுக்காக எந்தப் பணிகளும் செய்யவில்லை. மத்திய அரசின் திட்டங்களை தனது பெயரில் காட்டிக்கொள்கிறார். திமுக அரசில் உள்ள 35 அமைச்சர்களில், 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அமைச்சர் பொன்முடி தண்டிக்கப்பட்டு விரைவில் சிறை செல்வார். இன்னும் பல அமைச்சர்கள் சிறையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றமே ஊழல் வழக்கு இருக்கும் அரசியல்வாதிகள் பட்டியலைக் கேட்டுள்ளது.
நம்முடைய சமுதாயத்தில் பொருளாதாரத்தில் கடைசி பத்து சதவீதத்தில் இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தை, அடுத்த கட்டத்துக்குச் செல்ல ஏழு தலைமுறை ஆகிறது என்று சமீபத்தில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கையில் படித்தோம்.
ஏழைகள் ஏழைகளாகவே தொடர்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிக்கிறார்கள். முன்னாள் நிதியமைச்சர், முதலமைச்சரின் மகனும் மருமகனும் 30,000 கோடி சம்பாதித்துள்ளார்கள் என்று பேசினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை. ஓமலூர் தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வினோத் குமார், மணல் கடத்தலைத் தடுத்ததற்காக கொடூரமாக வெட்டப்பட்டார். கிராம அலுவலர்கள் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்கும் அளவுக்கு சீர்குலைந்து இருக்கிறது.
2.69 லட்சம் கோடி கடன் கடந்த 31 மாதங்களில் அதிகமாகியிருக்கிறது. மொத்தம் 8,34,544 கோடி கடன், இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலம், ஒரு ரேஷன் அட்டை மீது 3.81 லட்சம், இந்தக் கடன் நம் மீதுதான் விழுந்திருக்கிறது. புதியதாக கடன் வாங்காமல், இந்தக் கடனைத் தீர்க்கவே 87 ஆண்டுகள் ஆகும். இவர்கள் ஊழல் செய்து சம்பாதிக்க, நம் வருங்கால தலைமுறைகளையே கடனுக்குள்ளாக்கியிருக்கிறார். ஒரு குடும்பம் மட்டுமே பயனடைய நடக்கும் இது தான் திராவிட மாடல் ஆட்சி.
இந்த நிலை மாற வேண்டுமானால், தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும். வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் அதற்கு முதல்படி.
காஷ்மீர் 370 சட்டத் திருத்தம் உள்ளிட்ட முக்கியமான முடிவுகளை மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தைரியமாக முடிவெடுக்க, பாஜக பெரும்பான்மையாக ஆட்சியில் இருப்பதே முக்கியக் காரணம். மேலும் வரும் காலத்தில் தேசிய நதிகள் அனைத்தையும் இணைக்கும் பல்வேறு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்த தமிழகமும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் துணை நிற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.